ஜெயலலிதாவுக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தான்! – அமைச்சர் கடம்பூர் ராஜூ
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும். மேலும் கூட்டணிக்கான இடங்கள் குறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. இது எதுவுமே தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யவில்லை. இதன்மூலம் அவர்கள் தேர்தலை சந்திக்க தயார் இல்லை என தெரிகிறது.
மேலும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்த்து 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் தேர்தலை சந்திப்போம். முழுமையாக வெற்றி பெறுவோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை வழி நடத்துவதற்கு தகுதியானவர்கள் முதல்வரும், துணை முதல்வரும் தான். எனவே வெற்றிடம் என்பது இல்லை. பொதுசெயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்பதால் அந்த பதவி என்றைக்கு நிரப்பப்படாது.
2021-ல் நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என்று யாரும் சொல்லலாம், அதற்கு உரிமை உண்டு, கட்சி ஆரம்பித்தவர்களும், ஆரம்பிக்க இருப்பவர்களும் சொல்லலாம். சினிமாவில் முதல்வர் போன்று நடிப்பதற்கு எதுவும் பிரச்சனை கிடையாது. அதுபோன்று முதல்வராக வருவேன் என்று சொல்வதற்கும் தடை கிடையாது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.