மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் கோட்டைக்கு வந்த அவர் கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மரக்கன்று நட்டு, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.