Tamilசெய்திகள்

ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, “ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்” என்றார்.