X

ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் குவாட்டர், கோழி பிரியாணி மற்றும் ரூ.300 வினியோகம்

ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது. பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.

முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.

கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.