Tamilசெய்திகள்

ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கடைப்பிடிப்பது ஏன்? – முழு விபரம் இதோ

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான், மருத்துவர் தினம். ‘உலக மருத்துவ தினம்’ என்று இருந்தாலும், ‘தேசிய மருத்துவ தினம்’என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது நாட்டுக்கு நாடு மாறுபாடு கொண்டதாக இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்த தினத்தை பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றன. 1991-ம் ஆண்டு முதல் டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவைப் போற்றும் வகையில் இந்தியாவில் ‘தேசிய மருத்துவர் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தவர், பிதான் சந்திர ராய். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அதுவும் ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளை, இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தவர். சிறந்த மருத்துவராகவும், விடுதலை இயக்க போராளியாகவும் புகழ் பெற்றவராக இருந்தார், பிதான் சந்திர ராய். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதல்- அமைச்சராக பணியாற்றியவர். 1948-ம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை, அதாவது 1962-ம் ஆண்டு வரை, 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தார். அவர் அந்தப் பதவியில் இருந்த காலத்தில், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

பிதான் சந்திர ராய்தான், தற்போது மேற்கு வங்கத்தில் முதன்மை நகரங்களாக விளங்கும் துர்காப்பூர், கல்யாணி மற்றும் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பிதான்நகர் ஆகியவை உருவாக காரணமாக இருந்தவர். இவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, இவரது சாதனைகளை கருத்தில் கொண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட பிதான் சந்திர ராயை நினைவுகூரும் வகையில்தான், அவரது பிறந்த நாளான ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக இந்தியா அறிவித்துள்ளது. 80 ஆண்டு காலம் இந்த மண்ணுலகில் வாழ்ந்த பிதான் சந்திர ராய், தன்னுடைய பிறந்த தினத்திலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.