Tamilசெய்திகள்

ஜூன் 2ம் வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது?

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

அப்போது அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த கவர்னர் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்துக்கு முரணாகவும் உள்ளதால் இதை நான் வாசித்தால் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால் உரையை முடித்துக் கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறினார்.

இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையின் தமிழாக்கத்தை முழுவதையும் வாசித்து முடித்தார். இது அன்றைய தினம் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அதைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கானன பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டாலும் இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்து ஜூன் 4-ந் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் அதன் பிறகு சட்டசபை கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றி அரசு முடிவெடுக்க உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் முதல் வாரத்தில் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு ஜூன் 2-வது வாரம் கூடி எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது எந்தெந்த தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மமீது விவாதம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய உள்ளது. இந்த கூட்டத் தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்து சட்டசபையில் அதற்கேற்ப காரசார விவாதம் நடைபெறும். அதிலும் குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளிடையே தான் அனல் பறக்கும் விவாதம் சட்டசபையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் விவகாரம், குடிநீர் பிரச்சனை, தேர்தல் வெற்றி- தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அ.தி.மு.க. கிளப்ப உள்ளதாக தெரிகிறது. இதனால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.