X

ஜூன் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது! – நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஐ.சி.சி.யால் பரிந்துரை செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இருந்து தலா ஒருவர் ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமியின் வாக்கெடுப்பு மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையே, கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்து இருந்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய மாதத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததுடன், அதனை அடுத்து நடந்த 2 டெஸ்டுகளில் இரண்டு அரைசதம் அடித்ததன் மூலம் அவருக்கு இந்த விருது கிட்டி இருக்கிறது.

சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் தேர்வாகி இருக்கிறார். கடந்த மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் 8 விக்கெட்டுகள் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது, 2-வது ஒரு நாள் போட்டியில் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அவர் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா, சினே ராணா ஆகியோரை முந்தி இந்த விருதை பெறுகிறார்.