ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி

10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்பட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் அன்னு 11-வது நிமிடத்திலும், ரோப்னி குமாரி 14-வது நிமிடத்திலும் அடித்த கோலால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெர்மனி வீராங்கனைகள் சோபியா 17-வது நிமிடத்திலும், லாரா புத் 21-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பி சமநிலையை உருவாக்கினர். 24-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் அடித்த கோலால் மீண்டும் இந்தியா முன்னிலையை தனதாக்கியது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி அணி அடுத்தடுத்து 2 கோல் அடித்தது. அந்த அணியின் லாரா புத் (36-வது நிமிடம்), கரோலின் (38-வது நிமிடம்) ஆகியோர் இந்த கோலை அடித்தனர்.

அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (0-6) தோற்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் கனடாவை எளிதில் (12-0) தோற்கடித்து இருந்த இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்தன.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports