19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் காலிறுதி 1-ல் இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சக்சேனா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதிக அளவில் நம்பிய கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜுரெல் 15 ரன்னில் வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வீர் 25 ரன்களும், பிஷ்னோய் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கோலேகர் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசி திணறடித்தனர். இதனால் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.
அதேசமயம் துவக்க வீரர் சாம் ஃபன்னிங், பதற்றமின்றி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். அவருடன் ரோவ், ஸ்காட் இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடினர்.
சாம் அரை சதம் கடந்து நம்பிக்கை அளிக்க, ரோவ் 21 ரன்களிலும், ரோவ் 35 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து ஆடிய சாம் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 127 பந்துகளை சந்தித்த அவர், 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை அவர் எட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். குறிப்பாக 42-வது ஓவரில் 3 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களில் சுருண்டது. இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா தரப்பில் காத்திக் தியாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சிங் 3 விக்கெட் எடுத்தார். கார்த்திக் தியாகி ஆட்டநாயகன் விருது பெற்றார்.