X

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இந்திய அணி

9-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இந்திய அணி துபாயில் நேற்று நடந்த தனது லீக்கில் பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதில் கேப்டன் யாஷ் துல் டக்-அவுட் ஆனதும் அடங்கும்.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் (46 ரன்) மற்றும் பின்வரிசையில் விக்கெட் கீப்பர் ஆரத்யா யாதவ் (50 ரன்), ராஜ்வர்தன் (33 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடி அணியை சவாலான நிலைக்கு உயர்த்தினர். இந்திய அணி 49 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜீசன் ஜமீர் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அவர்கள் ‘எக்ஸ்டிரா’ வகையில் இந்தியாவுக்கு 19 வைடு உள்பட 30 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து 238 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. அதிகபட்சமாக முகமது ஷேசாத் 81 ரன்கள் (4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ரன்-அவுட் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரவிகுமார் வீசினார். முதல் 5 பந்துகளில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியதோடு 6 ரன்களை வழங்கினார். இதனால் கடைசி பந்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. இறுதி பந்தை எதிர்கொண்ட அகமத் கான் (29 நாட்-அவுட்) பவுண்டரிக்கு விரட்டி தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித் தந்தார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் நேபாளம்- இலங்கை அணிகள் சந்திக்கின்றன.