ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை கொடுத்த குழுவினரின் இரண்டாவது படமாக வெளியாகியிருக்கும் ‘ஜீவி’ எப்படி என்பதை பார்ப்போம்.
சில ஹீரோக்கள், சில தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் என்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்ப்பார்ப்போடு வெளியாகியிருக்கும் இந்த ‘ஜீவி’, ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை விட ஒரு படி அதிகமாகவே பிரம்மிக்க வைத்தது என்றால் அது மிகையாகாது.
க்ரைம் சஸ்பென்ஸ் ஜானர் படமாக தொடங்கினாலும், காதல் தோல்வி, வாழ்க்கை, விதி, பணம் என்று அனைத்து விஷயங்களையும் அறிவுப்பூர்வமாக பேசுவதோடு, அடுத்தது என்ன, என்று நம்மை எதிர்ப்பார்ப்போடு சீட் நுணியிலும் படம் உட்கார வைக்கிறது.
சென்னையில் பேச்சுலராக தங்கிக்கொண்டு வேலை செய்யும் ஹீரோ வெற்றியும், கருணாகரனும் ஒரே அறையில் தங்குகிறார்கள். அவர்களது ஹவுஸ் ஓனரான ரோகினி கண் பார்வையற்ற தனது மகளின் திருமணத்திற்காக 50 சரவன் நகை வாங்கி அதை பீரோவில் வைக்க, அந்த பீரோ சாவி எதிர்ப்பாரதவிதமாக தொலைந்துவிடுகிறது. தொலைந்த சாவி ஹீரோ வெற்றியிடம் கிடைக்க, வருமையினால் விரக்தியில் இருக்கும் வெற்றி அந்த சாவியை பயன்படுத்தி நகையை கொள்ளையடித்து விடுவதோடு, தனது புத்திசாலித்தனத்தால் போலீசிடம் சிக்கிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார்.
நகை காணாமல் போனது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரித்தாலும், வெற்றி தனது சாதுர்யத்தால் போலீசிடம் சிக்காமல் எஸ்கேப் ஆக, கதையில் திடீரென்று ஒரு மாற்றம். அதாவது, ஹவுஸ் ஓனரான ரோகினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் போல, ஹீரோ வெற்றியின் வாழ்க்கையில் நடக்கிறது. இதை ஒருவித அறிவியல் என்று கணிக்கும் வெற்றி, இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், தனது நண்பர் கருணாகரன் இறந்துபோவார் என்பதை அறிந்துக் கொள்வதோடு, தனது வாழ்க்கைக்கும், ஹவுஸ் ஓனர் வாழ்க்கைக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பதை அறிய முற்படும் போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைப்பதோடு, சில ஆச்சரியமான விஷயங்களும் நடக்கிறது. அது என்ன, அவற்றால் என்ன நடந்தது, இறுதியில் கொள்ளையடிக்கப்பட்ட நகை என்ன ஆனது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று நாம் சாதாரணமாக சொல்வதற்கு பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது, என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் கதையாசிரியர் பாபு தமிழ், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அறிவுப்பூர்வமாக சொல்ல, இயக்குநர் கோபிநாத்தின் திரைக்கதையும், காட்சிகளும் படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்துகிறது.
ஹீரோ வெற்றி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காதலித்த பெண் கழட்டி விடும் போது, காதல் தோல்வியை அவர் எடுத்துக்கொள்ளும் விதமும், அதே பெண் மீண்டும் அவருடன் பேச முற்படும் போது அவரிடம் இருந்து விலகுவது என்று தனது பாடிலேங்குவேஜ் மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கவருகிறார். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்திப் போகும் தன்மை கொண்டவராக இருக்கும் ஹீரோ வெற்றி, கோபம், செண்டிமெண்ட், விரக்தி என்று அனைத்தையும் அளவாக கையாண்டு கவர்கிறார்.
வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரனுக்கு டெய்லர்மேட் வேடம். இந்த வேடத்திற்கு இவரை விட்டால் ஆள் இல்லை, என்பது போன்ற வேடத்தில், தனக்கே உரித்தான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரோகினி, ரமா, கண் பார்வையற்றவராக நடித்திருக்கும் ஹீரோயின், ஹீரோவை கழட்டி விடும் பெண், மைம் கோபி என படத்தில் சில காட்சிகள் வரும் நடிகர்கள் கூட கவனிக்கும்படி நடித்திருக்கிறார்கள்.
சுந்தரமூர்த்தியின் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றாலும், அந்த ஒரு பாடலே அவரை நீரூபிக்கும் விதத்தில் இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணிக்கிறது. பிரவின்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. கதையுடனே பயணிக்கும் கேமரா எந்த இடத்திலும் தணித்து தெரியாமல் காட்சிகளை கையாண்ட விதத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
க்ரைம் சஸ்பென்ஸ் ஜானரில்
தொடர்பியல் என்ற புதிய யுக்தியை பயன்படுத்தி கதையாசிரியர் பாபு தமிழும், இயக்குநர் வி.ஜே.கோபிநாத்தும் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதை ரொம்பவே புதிதாக இருப்பதோடு, அதை அவர்கள் படமாக கையாண்ட விதம், சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கிறது.
அதே சமயம், தொடர்பியல், மையப்புள்ளி போன்றவை சாமண்ய மக்களுக்கு புரியுமா? என்பதில் சந்தேகமும் ஏற்படுகிறது. அதே சமயம், குழப்பமான சில விஷயங்களை சாதாரண மக்களுக்கு புரியும்படி சொல்வதற்காக கருணாகரன் கதாபாத்திரத்தை இயக்குநர் பயன்படுத்திய விதம் அதை சமன் செய்துவிடுகிறது.
க்ரைம் சஸ்பென்ஸ் ஜானர் கதையாக இருந்தாலும், வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், வாழ்க்கையை பற்றியும், மக்களை பற்றியும் பேசியிருக்கும் படம் வசனங்கள் மூலமும் கைதட்டல் பெறுகிறது.
”பெண்கள் விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும் அவங்க வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும்”, ”சோத்துக்கு கஷ்ட்டப்படும் போது பார்த்துக் கொண்டிருந்த கடவுள், நாம் திருடும் போதும் பார்க்கட்டும்” “மனுஷனுக்கு வரக்கூடாத நோய் விரக்தி” என்று பல இடங்களில் வசனங்கள் மூலம் கதையாசிரியரும், வசனகர்த்தாவுமான பாபு தமிழ் கவர்கிறார்.
திருடப்பட்ட நகையை சுற்றி பல சுவாரஸ்யங்கள் நடக்க, இறுதியில் அந்த நகையை பற்றி எந்த சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் படம் முடிகிறதே, என்று நாம் நினைக்கும் போது, அந்த நகை யாரிடம் கிடைத்தது என்பதை இயக்குநர் சொல்லி படத்தை முடிக்கும் போது, ஒட்டு மொத்த திரையரங்கமே கைதட்டல் சத்தத்தால் அதிர்கிறது.
மொத்தத்தில், இந்த ‘ஜீவி’ சினிமா ஜீவிகளுக்கான அறிவுப்பூர்வமான படமாகவும், சாமாண்யா மக்களுக்கான முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது.