ஜி-20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளைமறுதினம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் முன்னாள் பிரதமர்களான தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக இன்று காலை செய்தி வெளியானது.
இந்த நிலையில், ”ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நான் கலந்து கொள்ளமாட்டோன். என்னுடைய உடல்நலம் கருதி கொண்டு அதில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அரசுக்கு நான் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளேன். மிகப்பெரிய அளவில் ஜி-20 மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என தேவகவுடா தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் கலந்து கொள்வாரா? என்பது உறுதியாகவில்லை. சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, மன்மோகன் சிங் அவைக்கு சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்திருந்தார். இதனால் உடல்நலம் கருதி கலந்து கொள்வது சந்தேகமே.