X

ஜி20 நாடுகள் தலைவர் பதவியை பிரதமர் மோடியிடம் வழங்கிய இந்தோனேஷியா ஜனாதிபதி

இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.

நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினார்.

மேலும் செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடி இன்று பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளை பார்வையிட்டார்.

கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்த காடுகளை உலக நாடுகள் பராமரித்து அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது அரணாக இருந்து பாதிப்பை தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகித்தன. மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூக், ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து அதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார்.

உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.