ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாடு – இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு

ஜி-20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்கா, சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு, பாலி நகர விமான நிலையத்தில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தோனேஷிய அமைச்சர்கள், அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். மேலும் நடன கலைஞர்களும் வரவேற்பில் கலந்து கொண்டனர். பின்னர் விமான நிலையத்திற்கு வெளியேற திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்கள் அருகே சென்ற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மோடிக்கு ஆதரவாக உற்சாக குரல் எழுப்பினர்.

முன்னதாக ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் உலகளாவிய வளர்ச்சியை மீட்டெடுத்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேச்சு நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உலக தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும், ஜி20 மாநாட்டில், இந்தியாவின் சாதனைகளையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் தாம் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டின் கருப் பொருள் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை மையமாக கொண்டு அமைந்திருக்கும் என்றும், இது அனைவருக்கும் சமமான வளர்ச்சி, பகிர்ந்தளிக்கப்பட்ட எதிர்காலம் என்ற கருத்தை சுட்டிக்காட்டுவதாக அமையும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதில் கலந்து கொள்ள ஜி20 நாடுகளின் உறுப்பினர்களையும், பிற அழைப்பாளர்களையும் தனிப்பட்ட முறையில் அழைக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools