ஜி20 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பது உறுதி – வெள்ளை மாளிகை அறிவிப்பு
ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7-ம் தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனவே அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு நட்புறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.