ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை ரூ.360 கோடிக்கு காப்பீடு
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது பல்வேறு இடங்களில் மண்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
பூஜைக்கு பிறகு சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதில் லால்பாக் ராஜா, கணேஷ்கல்லி, வடலா ஜி.எஸ்.பி. மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள். ஆண்டுதோறும் பெரிய மண்டல்கள், தங்கள் மண்டல்களை காப்பீடு செய்வது வழக்கம். நடப்பாண்டு நகரின் பணக்கார விநாயகராக கருதப்படும் வடலா ஜி.எஸ்.பி. மண்டலுக்கு ரூ.360 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விநாயகருக்கு அணிவிக்கும் நகைகளுக்கு மட்டும் ரூ.38.47 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மண்டல் ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு ரூ.289.50 கோடி அளவுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கணிசமான தொகை காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 66 கிலோ தங்கம், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.