ஜி.எஸ்.டி. விதிப்பிற்கு மேல் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் அளவு குறைவாக இருக்கின்றது என்று மக்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அதனை நிரூபிக்கும் விதமாக அரை லிட்டர் பாலுக்குப் பதிலாக 430 கிராம் மட்டுமே இருப்பது தற்போது கண்டறியப்பட்டு உள்ளதாக வந்துள்ள செய்தி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று, அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு எடுக்கப்பட்ட தன் அடிப்படையில் ஆவின் பொருட்களான மோர், தயிர், லஸ்ஸி ஆகியவற்றின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியது.

இதன்படி, 10 ரூபாயாக இருந்த 100 மி.லி. கப் தயிர் 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பத்து ரூபாய் மீது 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டால், அதன் விலை 10 ரூபாய் 50 காசாகத்தான் உயரும். 12 விழுக்காடு வரி விதிக்கப் பட்டாலும் அதன் விலை 11 ரூபாய் 20 காசாகத்தான் உயரும். ஆனால் 12 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் 30 ரூபாய் என்றிருந்த ½ லிட்டர் தயிர் 35 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டிருந்தால், அதன் விலை 31 ரூபாய் 50 காசாகவும், 12 விழுக்காடு வரி விதிக்கப் பட்டிருந்தால் அதன் விலை 33 ரூபாய் 60 காசாகவும் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 35 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வில் கூட ஒரு வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்பட வில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கும் மேலாக ஆவின் பொருட்களின் விலையை அரசு உயர்த்தியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எத்தனை சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பதில் கூட ஒரு தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் ஒரு செயல்.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, குறைவான எடையில் பால் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், ஏழை மக்கள் வாங்கும் ஆவின் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. விதிப்பதை தடுத்து நிறுத்தவும், ஜி.எஸ்.டி. விதிப்பிற்கு மேல் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools