ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது.
மதிப்பு கூட்டு வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக ஒரே வரியாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வரி முறையால் மாநில அரசுகளுக்கு ஏற்படுகிற இழப்பை 5 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு ஈடு செய்யும் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த இழப்பீடு தொகையை பல மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் அந்த மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரச்சினை எழுந்துள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் சிவசேனா எம்.பி.க்கள், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சரக்கு சேவை வரி இழப்பீடு தொகை பாக்கியை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுதிய அட்டைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு கொண்டிருந்தனர். சபையில் அமளி நிலவிய நிலையில், அவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
நம நாகேஸ்வரராவ் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), அரவிந்த் சவந்த், வினாயக் ராவுத் ஆகியோர் சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. கேள்வி நேரம் முடிந்ததும், பூஜ்ய நேரத்தின்போது அனுமதி தரப்படும் என்றார். ஆனால் அமளி தொடர்ந்தது.
மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஏதோ கூற முற்பட்டனர். ஆனால் சபையில் கூச்சலும், குழப்பமும் நிலவியதால் அவர்கள் கூறியது கேட்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாயும் ஏதோ கூற முயற்சித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோஷமிட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லாவின் வேண்டுகோளை தொடர்ந்து இறுதியில் அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
இந்த பிரச்சினை, மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. சரக்கு, சேவை வரி இழப்பீடு நிலுவை தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்காதது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை அளித்தன. ஆனால் சபை தலைவர் வெங்கையா நாயுடு அவற்றை நிராகரித்தார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. கே.கேசவராவ், “கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 9 மாநிலங்களுக்கு சரக்கு, சேவை வரி இழப்பீடு வழங்கப்படவில்லை. அந்த மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் பாதித்துள்ளன” என்று கூறினார்.
ஆனால் சபை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை ஏற்கனவே எழுப்பிவிட்டதாகவும், உரிய நேரத்தில் மீண்டும் எழுப்ப வாய்ப்பு தரப்படும் என்றும் கூறினார்.
ஆனால் உறுப்பினர்கள் திருப்தி அடையாமல், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை காண்பித்து கோஷம் போட்டனர். அதை கண்டித்த சபை தலைவர் வெங்கையா நாயுடு, பூஜ்ய நேரத்தை (கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரம்) நடத்த விரும்பாவிட்டால், சபையை ஒத்திவைப்பேன் என்றார். அதன்பின்னர் சபை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.