ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலங்களுக்கு தரப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ஜூன் மாதத்திற்கு பின் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியிருந்தது. இதை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
இது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.
இவ்வாறு கடிதத்தில் கூறினார்.