ஜி.எஸ்.எல்.வி – எப் 11 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது! – கவுண்ட்டவுன் தொடங்கியது

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ இன்று தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று(செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணி அளவில் தொடங்குகிறது.

49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools