X

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டி – இந்தியா பேட்டிங் தேர்வு

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிராஜ், பிரசித் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் தீபக் சாகர், ஆவேஷ் கான் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

ஹராரே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர். இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

அதேசமயம் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஜிம்பாப்வே வீரர்கள் விளையாடுவார்கள்.