ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் – பா.ஜ.க முன்னிலை
81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் ஆளும் பாஜக பின்தங்கியது. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
காலை 9 மணிக்கு பிறகு முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. பாஜக 37 தொகுதிகளிலும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 36 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 2 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 6 தொகுகிளிலும் முன்னிலை பெற்றிருந்தன.
கடந்த தேர்தலில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிடுகிறது. எனினும் அவர்கள் போட்டியிடும் 2 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.