டெல்லியில் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.