ஜானி- திரைப்பட விமர்சனம்
சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் பிரஷாந்தின், நடிப்பில் உருவாகியிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘ஜானி’ எப்படி என்பதை பார்ப்போம்.
குறுக்கு வழியில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படும் பிரஷாந்த், பிரபுவை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்வதோடு, அவருடன் சேர்ந்து சட்ட விரோதமான வியாபாரங்களில் ஈடுபடுகிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், அஷுடோஸ் ராணா, ஆத்மா ஆகியோரும் கூட்டணி. இந்த ஐந்து பேரும் பார்ட்னர்களாக பல சட்ட விரோத தொழில்களை செய்ய, ஆளுக்கு ரூ.50 லட்சம் போட்டு ஒரு பொருளை கைமாற்றிவிடும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம், அஷுடோஸ் ராணாவின் பிடியில் இருக்கும் சஞ்சனா ஷெட்டியை காதலிக்கும் பிரஷாந்துக்கு, அவரை மீட்க நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனால், ஐந்து பேரும் சேர்ந்து செய்யும் தொழிலுக்கான இரண்டரை கோடி ரூபாயை கைப்பற்ற நினைக்கும் பிரஷாந்த், அதில் ஈடுபடும் போது சில விபரீதமானவைகளை செய்ய, அதனால் ஏற்படும் விளைவுகளும், அதில் இருந்து பிரஷாந்த் எஸ்கேப் ஆனாரா இல்லையா, என்பது தான் ‘ஜானி’ படத்தின் கதை.
இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் தமிழிக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் நடக்கும் தொடர் கொலைகளால் படத்தில் சுவாரஸ்யம் சற்று குறைந்து விடுகிறது.
ஆர்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கும் பிரஷாந்த், தன்னை கதையின் நாயகனாக காட்டிக்கொண்டிருப்பதோடு, தனது துள்ளல் நடிப்பை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். காதலிக்காக நண்பர்களுக்கு துரோகம் செய்து விட்டோமே, என்று அவர் வருத்தப்படுவது, அதே சமயம் தான் செய்யும் குற்றத்தில் இருந்து எஸ்கேப் ஆவது, என்று ஒவ்வொரு கட்டத்திலும் தனது நடிப்பில் வெரையிட்டியை காண்பித்து வெரிகுட் வாங்கிவிடுகிறார்.
பிரஷாந்துடன் ரொமன்ஸ் செய்வது மட்டுமே சஞ்சிதா ஷெட்டிக்கு வேலை என்பதால், அந்த வேலையை அவர் சரியாகவே செய்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் மட்டுமே வந்தாலும் பிரபுவின் நடிப்பும் அவரது கதாபாத்திரமும் அசத்தல். கம்பீரமான தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துவிடுகிறார். ஆனந்தராஜும், அஷுடோஸ் ராணா இருவரும் எப்போது சண்டைப்போட்டுக் கொண்டாலும், இரண்டாம் பாதி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்கள். அடியாளாக வரும் ஆத்மா, இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். முதல் பாதியில் பிரபு கைதட்டல் பெற்றால், இரண்டாம் பாதியில் ஷாயாஜி ஷிண்டே அந்த இடத்தை நிரப்பி பாராட்டு பெறுகிறார்.
படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் ரஞ்சன் துரைராஜ் கவனிக்க வைக்கிறார். எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதி காட்சிகளுக்கு விறுவிறுப்பை சேர்க்கும் அளவுக்கு பயணித்திருக்கிறது.
பணத்தை அபேஸ் செய்துவிட்டு கொலை செய்துவிடும் பிரஷாந்த், அடுத்த காட்சியில் பிரபுவிடம் வஷமாக சிக்கியதும், என்ன நடக்கப் போகிறது, என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட, அடுத்த காட்சியில் அவர் அசால்டாக அதில் இருந்து எஸ்கேப் ஆன உடன், ரசிகர்களிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. இப்படியே பிரஷாந்த் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப்பது திரைக்கதைக்கு விறுவிறுப்பை கொடுத்தாலும், இதுவே சில இடங்களில் ரசிகர்களை சலிப்படையவும் செய்துவிடுகிறது. இருந்தாலும், பாடல்களை தவிர்த்துவிட்டு திரைக்கதையை வேகமாக நகர்த்தியிருப்பது படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
தியாகராஜனின் திரைக்கதையும், வசனமும் நேர்த்தியாக இருக்க, அதற்கு ஏற்ப காட்சிகளையும் சுவாரஸ்யமாக வடிவமைத்து வெற்றிசெல்வன் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொருவரிடமும் பிரஷாந்த் சிக்கும் போதும், சூழ்நிலையும் அவரது புத்திசாலித்தனமும் அவரை தப்பிக்க வைத்தாலும், அதே சூழ்நிலையால் அவர் மீது நடக்கும் கொலை முயற்சியோடு படத்தை முடித்திருந்தால் க்ளைமாக்ஸ் எதார்த்தமாக இருந்திருக்கும். ஆனால் இயக்குநர் வெற்றிசெல்வன் அதை தவிர்த்துவிட்டு, பிரஷாந்தை அங்கே ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதற்காக, க்ளைமாக்ஸை சினிமாத்தனமாகவே முடித்திருக்கிறார். இதை பிரஷாந்த் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், சினிமா விரும்புகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மொத்தத்தில், இந்த ‘ஜானி’ ஜகஜாலா கில்லாடியாக இருக்கிறார்.
-ஜெ.சுகுமார்