ஜாக்பாட்- திரைப்பட விமர்சனம்
’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் ‘ஜாக்பாக்’ எப்படி என்பதை பார்ப்போம்.
1918 ஆம் ஆண்டு புதையல் ஒன்று பால் வியாபாரியிடம் கிடைக்க, அதன் மூலம் அவர் பெரிய செல்வந்தராகிவிடுகிறார். அவரிடம் இருந்து திருடுபோகும் அந்த புதையல், 2019 ஆம் ஆண்டு இட்லி விற்கும் பெண் ஒருவரிடம் கிடைக்க, அவரும் அதை வைத்து பணம் சம்பாதிக்கிறார். அவரது குறுக்கு புத்தியால் போலீசில் சிக்குபவர், அந்த புதையலை ஒரு இடத்தில் புதைத்துவிட்டு சிறை சென்றுவிடுகிறார்.
இதற்கிடையே, ஜோதிகாவும், அவரது அத்தையான ரேவதியும் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார்கள். இவர்கள் திருடும் கார், பைக் போன்றவற்றை மொட்டை ராஜேந்திரன் விற்றுக்கொடுக்கிறார். இப்படி திருடும் இவர்கள் போலீசில் சிக்கி சிறை செல்ல, சிறையில் இருக்கும் இட்லி விற்கும் பெண்மணி, தனது புதையல் ரகசியத்தை ஜோதிகா மற்றும் ரேவதியிடம் சொல்வதோடு, அது எங்கிருக்கிறது என்பதையும் கூறுகிறார். அந்த பெண்மணிக்கு தெரியாமல் அந்த புதையலை திருட நினைக்கும் ஜோதிகாவும், ரேவதியும் அதை எடுத்தார்களா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.
‘குலேபகாவலி’ படம் ஹிட்டாகியிருந்தால் இந்த படத்திற்கு ‘குலேபகாவலி 2’ என்று தான் இயக்குநர் கல்யாண் தலைப்பு வைத்திருப்பார், அப்படம் தோல்வி என்பதாலும், இதில் ஜோதிகா நடித்திருப்பதாலும் புதிய தலைப்பை தேர்வு செய்திருக்கிறார். தலைப்பு புதிது என்றாலும், கதை என்னவோ ‘குலேபகாவலி’ படத்தை போன்றே புதையல் தேடும் படலமாகவே இருக்கிறது. ஆனால், திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், இந்த படத்தை வேறுபடுத்தி காட்டியிருப்பதோடு, வெற்றிப்படமாகவும் ஆக்கியிருக்கிறது.
வருடத்திற்கு இரண்டு ஹீரோயின் சப்ஜக்ட் படங்களில் நடித்துவிடும் ஜோதிகா படத்திற்கு படம் வித்தியாசத்தை காட்டுவதில் கைதேர்ந்தவராக இருப்பவர், இப்படத்தின் மூலம் ஹீரோயினிஸம் படத்தில் நடித்திருக்கிறார். குறும்புத்தனமான பேச்சு, சொக்க வைக்கும் பார்வை, ரசிக்க வைக்கும் மேனரிசம் என்று ஒட்டு மொத்த திரையரங்கையே தனது நடிப்பால் கட்டிப்போடுபவர், காமெடியுடன், ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறார்.
நடிப்பு குறித்து சொல்ல பெரியதாக ஒன்றுமில்லை என்றாலும் ரேவதியும் காமெடி மூலம் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். வயது முதிர்வு முகத்தில் தெரிந்தாலும், நடிப்பு மற்றும் நடனத்தில் இன்னமும் இளமை ஊஞ்சலாடுகிறது.
ரேவதியை சின்சியராக காதலிக்கும் மொட்டை ராஜேந்திரனும், மானஸ்தன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்தராஜும் நம்மை அளவுக்கு அதிகமாகவே சிரிக்க வைக்கிறார்கள். தனிக்கதையாக வரும் யோகி பாபுவின் எப்பிசோடும், அவரது காமெடியும் ஓரளவுக்கு தான் என்றாலும், அவரால் ரசிகர்கள் சோர்வாகும் போதெல்லாம், ஆனந்தராஜ் நம்மை உற்சாகப்படுத்தி சிரிக்க வைக்கிறார். அதிலும், பெண் வேடத்தில் வரும் ஆனந்தராஜின் மேனரிசம் மற்றும் முக பாவனைகளும், அவர் பேசும் சாதாரண வசனங்களும் நம்மை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.
ஆனந்த் ராஜ் அண்ட் கோவிடம் மாட்டிக்கொள்ளும் ஜோதிகாவும், ரேவதியும் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சொல்லும் கதையும், அவர்களை நிர்வாணமாக்கி அங்கிருந்து தப்பிப்பது எல்லாம், அன்லிமிடேட் ஃபன்னாக இருக்கிறது.
படத்தில் வரும் சில கதாபாத்திரங்களுக்கு என்று இருக்கும் தனிக்கதை ரசிக்கும்படியும், காமெடியாகவும் இருக்கிறது. ஆனால், சமுத்திரக்கனியின் கதை மட்டும் எதற்கு என்றே தெரியவில்லை. யோகி பாபுவுக்காக அவரை திணித்திருக்கிறார்கள்.
’குலேபகாவலி’ பாணியில் கதை சொன்னாலும், கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் கையாண்ட விதத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் இயக்குநர் கல்யாண், ஜோதிகாவை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டியிருப்பதோடு, படத்தை பிரம்மாண்டமாகவும் காட்டியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதலே நம்மை சிரிக்க வைக்க தொடங்கினாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் காமெடி தர்பார் காணாமல் போய்விடுகிறது. பிறகு ஆனந்தராஜின் அவதாரம் அந்த இடத்தையும் நிரப்பி, சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்பதை உறுதி செய்கிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியலாக இருக்கிறது. பின்னணி இசையும் அதே ரகம் தான் என்றாலும், கொஞ்சம் சத்தத்தை குறைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறார். இதற்கு தயாரிப்பாளரின் தாராள மனசும் காரணம். பாடல் காட்சிகளை மாஸ் ஹீரோக்கள் படம் போல படமாக்கியிருக்கிறார்கள். ஏகப்பட்ட நடன கலைஞர்கள், அவர்களது உடை என அனைத்திலும் செலவு தெரிகிறது.
பெரிய நட்சத்திர கூட்டத்தைக் கொண்டு இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதை சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், முழு படமும் நம்மை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது. தனித்துவிடப்பட்ட மனோபாலாவின் மூலம் இறுதியில் இயக்குநர் சொல்லும் ட்விஸ்ட் அல்டிமேட்டாக இருந்தாலும், படம் முடிந்த நிலையில் அதை காட்டியிருப்பதால் அது வீணாகிவிட்டது.
ஜோதிகாவும், ரேவதியும் கொள்ளையடிப்பதை நியாயப்படுத்துவதற்காக பள்ளிக் கல்விக் கட்டண உயர்வை காரணம் காட்டியிருக்கும் இயக்குநர் கல்யாண், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் பேசுகிறார். படம் முழுவதிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் லேசாக சிந்திக்கவும் வைக்கிறார்.
காமெடி படம் என்றாலே லாஜிக் பார்க்க கூடாது அதில் இருக்கும் மேஜிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் இந்த ‘ஜாக்பாட்’ ஜோதிகாவுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் தான்.
மொத்தத்தில், ‘ஜாக்பாட்’ கலகலப்பான காமெடி தர்பார்.
-ஜெ.சுகுமார்