ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை தாக்குதல் – 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் பிஜுகாரா பகுதி உள்ளது. இங்குள்ள சண்கம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய ரிசர்வ் படை போலீஸ் வீரர்கள், மாநில போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.
பாதுகாப்படை வீரர்கள் தாக்கியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.
ஆனால், அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ‘எண்கவுன்டர்’ நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர்.
அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.