Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நீட் தேர்வு எழுதிய மூன்று மாணவிகள் தேர்ச்சி

மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காவிடில் மருத்துவ படிப்பில் சேர்வது கடினம். மேலும், நன்றாக பயிற்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் சூழ்நிலை உள்ளதால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களால் மருத்துவம் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுவதாக விமர்சனமும் எழுந்து வருகிறது.

ஆனால், திறமையான மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் படைக்கிறார்கள். அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரை மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்ஷேரா பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் (உறவினர்கள்) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருக்கிறார்கள்.

தேர்ச்சி பெற்ற சகோதரிகளில் ஒருவர் துபா பாஷிர் கூறுகையில் ”நாங்கள் மூன்று பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை சிறப்பானதாக உணர்கிறேன். ஏனென்றால், நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக பள்ளிக்கு சென்றோம். பயிற்சி வகுப்பிற்கு சென்றோம். எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவராவோம். நாங்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டோம். அதன் விளைவாக இந்த ரிசல்ட் கிடைத்ததுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மற்றொரு மாணவி ருதாஃபா பாஷீர் கூறுகையில் ”நாங்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளோம். 11-ம் வகுப்பு படிக்கும்போது, நாங்களாகவே நீட் தேர்வுக்கு தயாரானோம். மிகப்பெரிய அளவில் பயிற்சி மேற்கொண்டோம். இந்த பெருமை எல்லாம் சிறு வயதில் இருந்தே எங்களுக்கு ஆதரவாக இருந்த பெற்றோர்களுக்குத்தான்” என்றார்.

மற்றொரு மாணவி அர்பிஷ் ”எங்கள் குடும்பத்தில் யாரும் டாக்டர் கிடையாது. இதனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். டாக்டராக வர வேண்டும் என்பது என்னுடைய சொந்த முடிவு. தொடக்கத்தில் இருந்தே பெற்றோர்கள் ஆதரவாக இருந்தனர். இதுதான் முதல் மற்றும் கடைசி முயற்சி என்ற நோக்கத்தில் படித்து வெற்றி பெற்றோம்” என்றார்.