பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று இந்தியா வருகிறார்.
டெல்லியில் நடைபெறும் 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான
ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் உள்பட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஜப்பான்-இந்தியா உச்சி மாநாடு வாய்ப்பளிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார்.
இதற்கு முந்தைய இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு டோக்கியோவில் அக்டோபர் 2018 ஆண்டு நடைபெற்றது. 2019 டிசம்பரில் கவுகாத்தியில் நடைபெற இருந்த உச்சிமாநாடு பல்வேறு
காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா-ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கும் இரு நாடுகளிடையேயான உச்சி மாநாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.