ஜப்பான் அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை இம்மாதம் இறுதியில் கடலில் விடுகிறது

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும், கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால் தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு, சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும். ஜப்பானிய தலைவர், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news