ஜப்பானில் இருந்து திரும்பிய கிருஷ்ணகிரி தம்பதி வீட்டை விட்டு வெளியே வர தடை!
உலகில் 104 நாடுகளில் பரவிய இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் 2,800-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டில் வேலை செய்து வந்த தம்பதி சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்கு நேற்று முன்தினம் திரும்பினார்கள்.
அவர்கள் வயிறு எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இல்லை என தெரிய வந்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவத்திடம் கேட்ட போது கூறியதாவது:-
ஜப்பான் நாட்டில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர். இதில் ஆணுக்கு வயிறு எரிச்சல் இருந்ததால் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கணவன் – மனைவி 2 பேருடைய ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா அறிகுறிகள் இல்லை.
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ந்து ஒரு மாதம் அவர்களின் வீட்டிற்கு மருத்துவ குழுவினர் சென்று அவர்களின் உடல் நிலையை கண்காணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் இருக்கும் அந்த தம்பதியினரை மருத்துவ குழுவினர்கள் அடிக்கடி சென்று பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். இதனால் அந்த தம்பதியினர் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பீதியால் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் யாரும் அந்த தம்பதியின் வீட்டின் அருகே கூட செல்வதற்கு தயங்குகின்றனர்.