Tamilவிளையாட்டு

ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – டோக்கியோ கவர்னருடன் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆலோசனை

ஜப்பானில் கடந்த வருடம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. அந்த சமயம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் போட்டி, இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலான நாடுகளில் 2-வது அலை, 3-வது அலை கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று ஒலிம்பிக் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதிகாரிகள் நம்பியிருந்தனர்.

இந்த நிலையில்தான் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஜப்பானில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22-ந்தேதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச ஒரேநாள் பதிவு இதுவாகும்.

இதற்கிடையில் ரஷிய ரக்பி அணி ஸ்டாஃப், பிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்கும் ஓட்டல் ஊழியர்கள், தற்போது சுரினாம் நாட்டின் பேட்மிண்டன் வீராங்கனை வரிசையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இதனால் டோக்கியோ கவர்னருடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் ஆலோசனை நடத்த உள்ளார். நேற்று தாமஸ் பேச் ஜப்பான் பிரதரை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் டோக்கியோ கவர்னரை சந்திக்க உள்ளார். ஆனால் எது குறித்து பேச இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை திறம்பட நடத்த முடியுமா? என்பது குறித்து விவாதிக்கப்படலாம்.

தென்அமெரிக்க நாடான சுரினாமின் பேட்மிண்டன் வீராங்கனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சுரினாமின் மற்ற வீரர்- வீராங்கனைகள் அமெரிக்கா சென்று, அங்கிருந்து ஜப்பான் செல்ல இருக்கின்றனர்.