ஜனாபதிபதி பதவிக்கு சரத்பவார் பெயரை பரிசீலிக்க வேண்டும் – சிவசேனா கோரிக்கை
மகாராஷ்டிரா அரசியலில் ‘வலிமையான மனிதர்’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வர்ணிக்கப்படுகிறார். மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவியில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா கட்சி, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்த புதிய கூட்டணி அரசு அமைவதில் முக்கிய பங்கு வகித்தவர், சரத்பவார்.
இந்தநிலையில், 4 முறை மராட்டிய முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரி பதவி வகித்த 79 வயது சரத்பவாரை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சரத்பவார் நாட்டின் மூத்த தலைவர். அவரை 2022-ம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க போதுமான எண்ணிக்கை எங்களிடம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சரத்பவாருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.