ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நாளை (24-ந் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திரவுபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என தெரிய வந்துள்ளது.