ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தொண்டர்கள் கடந்த 19-ம் தேதி மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மாநில மக்கள் தங்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு தினசரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம், ஜனநாயகம் மற்றும் அரசின் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் கற்பனை செய்ய முடியாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர். ஆளும் மாநில அரசு அரசியலமைப்பை தொடர்ந்து மீறுவதை பார்த்து, மத்திய அரசு அமைதியாக இருந்தால், தேசத்தின் சிதைவுக்கு விதைகளை விதைப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. எனவே ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.