Tamilசெய்திகள்

ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் – வங்கி ஊழியர்கள் பங்கேற்பு

வேலைவாய்ப்பின்மை, விலைவாசியேற்றம், போன்ற பல பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருகின்றன. பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஆனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற சில முக்கிய பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டெ செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊதிய விகிதம் மற்றும் ஓய்வூதியம் குறித்த சட்ட திருத்தங்களால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தன.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ஹிந்த் மஸ்தூர் சபா, தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு, சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கம், அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் போன்ற சங்கங்கள் என மொத்தம் 10 முக்கிய தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேலைக்கான உரிமை மற்றும் ஊதிய உரிமை ஆகியவற்றை உறுதி செய்தல், தொழிலாளர் சட்ட திருத்தம், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000, அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் போனஸ், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அகற்றுவது, பொதுத் துறை மற்றும் வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, வங்கிகளை ஒன்றிணைக்க கூடாது, வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளுக்கு தேசிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும்படி பல்வேறு தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், ஜனவரி 8-ம் தேதி நடக்கும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில், 5 வங்கி ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் பங்கேற்க உள்ளன.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகள், எல்.ஐ.சி நிறுவன ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வர். மேலும் ராணுவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலை , எஃகு, எண்ணெய் நிலக்கரி, ரயில்வே, துறைமுகங்கள், சாலை போக்குவரத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *