X

ஜனவரி 8 ஆம் தேதி சாலை, ரயில் மறியல் போராட்டம்! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. விவசாய தொழிலாளர்கள் வேலை இன்றி அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அவலம் தொடர்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று 9 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

அதில் முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-

* தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 250 நாட்கள் வேலை, கூலி ரூ.600 ஆக உயர்த்தவேண்டும்.

* 60 வயதான விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

* வேளாண் விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும்.

* குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.

* விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி தமிழகத்தில் சுமார் 500 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: south news