ஜாக்டோ-ஜியோ அவசர உயர்மட்ட குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருந்தோம். ஆனால் ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் போராட்டத்தை ஒத்திவைத்தோம்.
இதற்கிடையில் எங்கள் வழக்கு இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு நீதிபதிகள், அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதிக்குள் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். எனவே எங்களது போராட்டத்தை அடுத்த மாதம் 7-ந் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
புதிய பென்சன் திட்டம் குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை தாக்கல் செய்தும், அரசு இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும் 21 மாத நிலுவை தொகை வழங்க அரசு தயாராக உள்ளதாக தெரிகிறது. எங்களை பொறுத்தவரை அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். ஐகோர்ட்டு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஜாக்டோ- ஜியோ தொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நேற்று நடந்தது.
விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 21 மாத நிலுவை தொகையை அளிப்பது பற்றி, அரசு ஊழியர் சங்கம் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரித்து சித்திக் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவிக்கவேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்ரீதர் கமிட்டி, சித்திக் கமிட்டி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து, அந்த கமிட்டியே ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.