Tamilசெய்திகள்

ஜனவரி 30, 31 தேதிகளில் திட்டமிட்டபடி வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது

வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.