Tamilசெய்திகள்

ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது

நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 7-வது மாதமாக ஜனவரியிலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஜனவரி மாத வசூலை விட 15 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:

ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 394 கோடி வசூலாகி உள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது மாதமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது.

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகம் ஆகும்.

பொருளாதாரம் மீண்டு வருதல், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், போலி ரசீதுக்கு எதிரான நடவடிக்கைகள், வரிவிகிதத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவைதான் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்ததற்கு காரணங்கள் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.