Tamilசெய்திகள்

ஜனநாயக சக்திகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை அளிக்கிறார் – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 138-வது ஆண்டு நிறுவன நாளை, கொண்டாடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிற வகையில் காங்கிரஸ் கட்சி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இதில், இந்தியாவின் பழமை வாய்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சி உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. கட்சியை 2024 இல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. அதற்காக தமிழக முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் இந்திய தேசிய காங்கிரசை ராகுல்காந்தி சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்று கூறியதோடு, வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு பொருத்தமான மாற்று மருந்தாக அவர் திகழ்கிறார் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தேசிய அளவிலான கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை எதிர்ப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்களை பாதுகாக்க முடியும் என்று கூறியதன் மூலம் அவரது தெளிவான அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடைபயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தது முதல் 110 நாட்களை கடந்து மக்கள் பேராதரவோடு எழுச்சிமிக்க பயணமாக நடைபெற்று வருகிறது. மக்கள் பேராதரவு குவிந்து வருவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து கருத்து கூறிய மு.க. ஸ்டாலின் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி அவரை மனதார பாராட்டியிருக்கிறார். 2003 இல் சோனியா காந்தியும், கருணாநிதியும் இணைந்து உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தி, வழிநடத்துகிற வகையில் அதே கொள்கை பாதையில் மு.க. ஸ்டாலின் செயல்படுவது தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு அரசியல் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.