நாக்பூரில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். இதற்கிடையே போட்டியின் போது ஜடேஜா தனது கைவிரலில் மர்ம பொருளை தடவினார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முகமது சிராஜ் தனது உள்ளங்கைக்கு மேலே வைத்து ஒரு க்ரீம் போன்ற திரவத்தை ஜடேஜாவிடம் கொடுக்கிறார். அதை ஜடேஜா தனது விரலால் லேசாக தொட்டு, பந்தை பிடித்து வீசும் இடது கையின் அனைத்து விரல்களிலும் தடவினார்.
ஜடேஜா தனது கைவிரலில் தடவிய மர்ம பொருள் என்ன என்று சர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம்பெய்ன் டுவிட்டரில் கூறும் போது, இது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்றார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, ஜடேஜா தனது விரல்களில் என்ன பூசுகிறார்? இது போன்றதை நான் பார்த்ததில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டிடம் இந்திய அணி விளக்கம் அளித்தது. நடுவரை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, ஜடேஜா தனது விரல்களில் வலி நிவாரணி கிரீமை தடவியதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.