ஜடேஜாவின் ரன் அவுட் விவகாரம்! – அதிருப்தி தெரிவித்த கோலி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஜடேஜா ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.48-வது ஓவரில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (21 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார். ஜடேஜா ஒரு ரன்னுக்கு வேகமாக ஓடிய போது வெஸ்ட் இண்டீஸ் பீல்டர் ரோஸ்டன் சேஸ் பந்தை ஸ்டம்பின் மீது சரியாக எறிந்தார். முதலில் நடுவர் ஷான் ஜார்ஜ் அவுட் கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அப்பீல் செய்யவில்லை.
ஆனால் மைதானத்தில் உள்ள மெகா திரையில் ரீப்ளேயை பார்த்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் இது அவுட் என்று கூறி நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து 3-வது நடுவரின் கவனத்துக்கு சென்றது. டி.வி. ரீப்ளேயில் ஜடேஜா ரன்-அவுட் தான் என்பது தெரிய வந்ததால், அவுட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவ்வளவு தாமதமாக டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தது இந்திய கேப்டன் கோலியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
வெளியில் இருந்த அவர் உடனடியாக தனது இருக்கையை விட்டு எழுந்து ஆட்சேபனையை தெரிவித்தார். எது எப்படியோ அவர் மைதானத்திற்குள் வரவில்லை.
ஆட்டம் முடிந்ததும் ரன்-அவுட் சர்ச்சை குறித்து பேசிய கோலி, ‘பீல்டர் கேட்கும் போது, நடுவர் நாட்-அவுட் என்கிறார். அத்துடன் அது முடிந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு டி.வி. ரீப்ளேயில் பார்த்து விட்டு அப்பீல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மைதானத்துக்கு வெளியே டெலிவிஷனில் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நடுவரின் முடிவில் எப்படி தலையிட முடியும். கிரிக்கெட்டில் இது போன்று நிகழ்ந்ததை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை’ என்றார்.