X

சோப்பு வாங்கினால் கார் இலவசம் என்று கூறி விவசாயிடம் மோசடி! – இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45), விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் தங்கராசுவிடம், நாங்கள் சோப்பு வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் சோப்பு வாங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும். அந்த கூப்பனில் எந்த பொருள் உள்ளதோ, அதனை பரிசாக வழங்குவோம் என்றனர்.

இதையடுத்து தங்கராசு, சோப்பு ஒன்றை வாங்கி, அதில் இருந்த கூப்பனை பிரித்து பார்த்தபோது அதில் ஸ்டவ் அடுப்பு இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த தங்கராசுவுக்கு, காந்தீஸ்வரனும், பேச்சிமுத்துவும் ஸ்டவ் அடுப்பை பரிசாக வழங்கினர். மேலும் அவரிடம், இந்த பரிசுக்கு மற்றொரு பரிசு உண்டு என்று தெரிவித்ததுடன், அதில் உங்களுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்றனர்.

ஸ்டவ் அடுப்பை பரிசாக தந்ததால் மோட்டார் சைக்கிளையும் தந்து விடுவார்கள் என்று எண்ணிய தங்கராசுவிடம், 2 பேரும் மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும். அதற்கான பணத்தை தந்தால் நாங்கள் நாளையே உங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து தருவோம் என்றனர்.

அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும், பிறகு மறுநாள் தங்க ராசு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது தங்கராசுவிடம், உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறிவிட்டதால், அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்க ராசு, ரூ.45 ஆயிரத்தை 2 பேரிடமும் கொடுத்தார்.

அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும் , நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து சென்றுவிட்டனர்.

மறுநாள் தங்கராசுவை தொடர்பு கொண்டு பேசிய காந்தீஸ்வரன், பேச்சிமுத்து, நாங்கள் உங்களுக்கு பரிசாக தர காரில் வந்து கொண்டிருந்தோம். ஆனால் வழியில் சோதனை நடத்திய போலீசார், காருக்கான ஆவணங்களை கேட்டனர். புதிய கார் என்பதால் எங்களிடம் ஆவணங்கள் இல்லை.

எனவே அதற்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறுகிறார். நாங்கள் அவ்வளவு பணம் எடுத்துவரவில்லை. நீங்கள் அந்த பணத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம். பணத்தை நேரில் வந்து கொடுத்தாலும் சரி அல்லது வங்கி கணக்கில் செலுத்தினாலும் சரி, உங்களுக்கு எப்படி வசதிபடுகிறதோ? அதுபோல் செய்யுங்கள் என்றனர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த அவர், இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார். உடனே போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதுரங்கவேட்டை சினிமா படத்தில் பரிசு பொருள் வழங்குவதாக கூறி, ஒருவரின் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும். அதுபோல் அறந்தாங்கி விவசாயியிடம் சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்தீஸ்வரன், பேச்சிமுத்து மட்டுமின்றி இன்னும் சிலர் நெட்வொர்க் அமைத்து தமிழகம் முழுவதும் பரிசு பொருட்கள் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை யொட்டி பணப்புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பல்வேறு அறிவுரைகள் கூறியும் பொதுமக்கள் பலர் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: south news