Tamilசெய்திகள்

சோனியா காந்தி நடத்திய பேச்சுவார்த்தை – இறங்கி வந்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு சித்தராமையாவிற்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இருவருமே முதல்-மந்திரி பதவியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். இதனால் டெல்லியால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் போனது.

சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மல்லிகார்ஜூனா கார்கே உடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 48 மணி நேரமாக மாறி மாறி ஆலோசனைகள் செய்யப்பட்டன. சித்தராமையாவிற்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் கட்சியை உடைத்து விடுவார். தனியாக கூட கட்சி தொடங்கும் நிலைக்கு செல்வார்.

அதனால் டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி இதில் ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார்.

அதோடு டி.கே. சிவக்குமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல், கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பேசியும் இறங்கி வராத டி.கே. சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்துள்ளார்.