X

சோனியா காந்தி தலைமையில் 23 ஆம் தேதி நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளி போகிறது

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து மாயாவதி இன்று (திங்கட்கிழமை) சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 8 கருத்து கணிப்புகளில் 7-ல் பாரதீய ஜனதாதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாயாவதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் டெல்லிக்கு செல்லும் முடிவை தவிர்த்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேவைப்பட்டால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கலாம் என்று அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சோனியா- மாயாவதி சந்திப்பு தள்ளி போய் உள்ளது.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சத்தீஸ் சந்திரமிஸ்ரா கூறுகையில், “டெல்லியில் இன்று எங்கள் கட்சி தலைவர் மாயாவதிக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. டெல்லியில் யாரையும் சந்தித்து பேசும் திட்டமும் இல்லை. அவர் லக்னோவில்தான் இருக்கிறார்” என்றார்.

மாயாவதி திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டதால் சந்திரபாபு நாயுடு முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாயாவதியை போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிய வருகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே காங்கிரஸ் கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ராகுலின் செயல்பாடுகளில் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். என்றாலும் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தனக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்று நினைத்தார்.

ஆனால் கருத்து கணிப்புகளில் அவருக்கு சாதகமான வகையில் அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறப்படவில்லை. எனவே 23-ந்தேதி வரை காத்திருக்க அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு சோனியா அழைப்பு விடுத்து இருந்தார். அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்ல போவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் அறிவித்து இருந்தனர்.

பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஓரணியாக ஜனாதிபதியை 23-ந்தேதி இரவே சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளால் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.