சொந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கேரள வழக்கறிஞர்!
இந்திய ரெயில்வே விரைவான பயணத்தை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கியது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும். மேலும், வேகமாக செல்வதாக பயணிகள் நேரம் மிச்சமாகும். குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் பெரும்பாலான பயணிகள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்படி ஒரு நிலை கேரளாவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டிற்கு வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளது. இந்த ரெயில் பாலக்கோடு மாவட்டத்தின் ஷோர்னுர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் ரெயில் நிலையத்தில் நிற்காது. இதனால் 56 கி.மீட்டர் பயணம் செய்து ஷோர்னுர் வர வேண்டியுள்ளது.
இதனால் மலப்புரம் மாவட்டச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வந்தே பாரத் ரெயிலை திருர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், மனோஜ் மிஸ்ரா, நரசிம்மா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் ”வந்தே பாரத் ரெயில் எங்கு நிற்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?. அடுத்ததாக டெல்லி- மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் நாங்கள் நிறுத்தம் குறித்து அட்டவணை வெளியிட வேண்டுமா?. இது கொள்கை அளவில் முடிவு எடுக்கும் விசயம். அதிகாரிகளிடம் செல்லுங்கள்” என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரிசீலனை செய்யும்படி அரசை கேட்டுக்காள்ள மனுதாரர் வலியுறுத்தினார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரிப்பதாக பார்த்தால், நான் அதில் தலையிடமாட்டோன் எனத் தெரிவித்தார். மேலும், ”எந்தெந்த இடத்திற்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது ரெயில்வே தீர்மானிக்க வேண்டியது. குறிப்பிட ரெயில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க எந்தவொரு தனி மனிதருக்கும் உரிமை கிடையாது” என கோர்ட் தெரிவித்தது.