Tamilவிளையாட்டு

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 முறை டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்த இந்திய அணி

இந்திய மண்ணில் 200 ரன்னுக்கு குறைவாக இலக்கை நோக்கி ஆடிய டெஸ்டுகளில் இந்தியா ஒரு போதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடருகிறது. இத்தகைய இலக்கை எதிர்கொண்ட 33 டெஸ்டுகளில் 30-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 தொடருக்கு மேல் (ஆஸ்திரேலியா 10 முறை) வென்றதில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்த இந்தியா அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டுகாலக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும். முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலின் வயது 23 ஆண்டு 33 நாட்கள். டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை பெற்ற 5-வது இளம் வீரர், இந்திய அளவில் 2-வது இளம் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இந்த தொடரில் இரண்டு இரட்டை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 971 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 8 டெஸ்டுகளில் ஆடிய வீரர்களில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த வகையில் கவாஸ்கர் 938 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.