சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் 317 ரன் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் பகல்- இரவாக நடந்த 3-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
2012-13-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. கடைசியாக 2012-13-ல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
அதன்பிறகு விளையாடிய தொடர்களில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா சாதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கிலும் (2012-13), வெஸ்ட் இண்டீசை 2-0 என்ற கணக்கிலும் (2013-14), தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கிலும் (2015-16), நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கிலும் (2016-17), இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கிலும் (2016-17), வங்காளதேசத்தை 1-0 என்ற கணக்கிலும் (2016-17), ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கிலும் (2016-17), வீழ்த்தியது.
அதைத்தொடர்ந்து இலங்கையை 1-0 என்ற கணக்கிலும் (2017-18), ஆப்கானிஸ்தானை 1-0 என்ற கணக்கிலும் (2018), வெஸ்ட் இண்டீசை 2-0 என்ற கணக்கிலும் (2018-19), தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கிலும் (2019-20), வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கிலும் (2019-20), தற்போது இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கிலும் (2020-21) தோற்கடித்தது.
அதாவது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளை சொந்த மண்ணில் 2 முறையும், நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளை தலா ஒரு தடவையும், விழ்த்தியது.
ஆஸ்திரேலியா அணி 2 தடவை அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் இதை நிகழ்த்தியிருந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளது.