சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்களை ஜப்தி பண்ண சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.
அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.
சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால் தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.