X

சொதப்பிய பந்து வீச்சாளர்கள் – டோனி விடுத்த இரண்டாவது எச்சரிக்கை

ஐ.பிஎல் போட்டியில் சி.எஸ்.கே.அணி லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்து. ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கான்வே 29 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி , 2 சிக்சர்) அம்பதி ராயுடு 14 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 16 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர். பிஷ்னோய் , மார்க் வுட் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெய்ல் மேயர்ஸ் 22 பந்தில் 53 ரன்னும் (8 பவுண்டரி , 2 சிக்சர்) , நிக்கோலஸ் பூரன் 18 பந்தில் 32 ரன்னும் ( 2 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர்.

மொய்ன் அலி 26 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். துஷ்கர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் , சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தற்போது சொந்த மண்ணில் லக்னோவை தோற்கடித்து வெற்றி கணக்கை தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் நோபால், வைடுகளை அதிகமாக வீசியதால் கேப்டன் டோனி கடும் கோபம் அடைந்தார். 13 வைடுகளும் 3 நோபாலும் வீசப்பட்டன. குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் பந்து வீச்சாளர்கள் 4 வைடு, 2 நோ பால்களை வீசினார்கள். இதனால் நேற்றைய போட்டிக்கு பிறகு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களை கடுமையாக எச்சரித்தார். வேறு கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டுமா? என எச்சரித்தார்.

இது தொடர்பாக டோனி கூறியதாவது:-

வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டால் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆடுகள தன்மைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பந்து வீச வேண்டும். பீல்டர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்களோ பந்து அங்கே செல்லும் வகையில் திட்டத்தை மாற்றி அமைத்து பந்து வீச வேண்டும்.

எதிர் அணி பவுலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்கள் என்ன யுக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து நீங்கள் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால், வைடுகளை வீசினோம். இது சரியானதாக இல்லை. நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது எச்சரிக்கை. இல்லையென்றால் அதன் பிறகு நான் வெளியேறி விடுவேன்.

சேப்பாக்கம் ஆடுகளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இரண்டு அணிகளும் ரன்களை குவித்தன. எங்களுக்கு முதல் போட்டியே சிறப்பாக அமைந்துவிட்டது. 2 அணிகளுமே 200 ரன்னுக்கு மேல் குவித்ததால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இங்கு ரன்களை குவிக்க முடிந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இதே போன்று ஆடுகளம் தொடர்ந்து அமைக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) மும்பையில் சந்திக்கிறது. லக்னோ அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்தது. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 7-ந் தேதி எதிர் கொள்கிறது.